திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலய ஆடி அமாவாசை தீர்த்தோற்சவ திருவிழா

திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்த ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் எதிர்வரும் 28 செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 14.08.2015 ஆம் திகதி தீர்த்தோற்சவமும் இடம்பெறவுள்ளது.

அதனைத் தொடர்ந்து 15 ஆம் திகதி பூங்காவனத் திருவிழாவும். 16 ஆம் திகதி வைரவர் பூசையும் நடைபெற்று ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் நிறைவு பெறவுள்ளது.

Thirukovil Notice

இலங்கைத் திருநாட்டின் தென் கிழக்கே வரலாற்றுப் பழைமையும் பெருமையும் இறை பக்தியும் பூத்து நறுமணம் வீசும் தேசத்துக் கோயிலாக போற்றப்படும் திருக்கோவில் பிரதேசத்தில் அமையப்பெற்ற புண்ணியத் திருத்தலமாகவும் மட்டக்களப்பு தமிழர் வரலாற்றில் முதன்மையாக கருதப்படுவது திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயமாகும். கிழக்கின் வடக்கே வெருகல் தொடக்கம் தெற்கே கூமுனை வரையுள்ள திருப்படைக்கோவில்களில் முதன்மையானதும் பண்டைய அரசர்களின் மதிப்பும் மானியமும் சீர்வரிசைகளும் பெற்றுவந்த இவ் ஆலயம் இலங்கையினை ஆட்சிசெய்த சிங்கள மன்னர்களாலும் சோழ பாண்டியராலும் கண்டி நாயக்க மன்னராலும் திருப்பணிகள் இடம் பெற்று வந்துள்ளது.

இத்தனை சிறப்புக்கள் பொருந்திய திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தினை முதல் முதலில் கற்கோவிலாக நிர்மாணித்த மன்னன் இலங்கை முளுவதனையும் ஆட்சி செய்த மனு மன்னன் என்ற எல்லாளன் ஆவான் இதனை கல் வெட்டுக்கள் செப்பேடுகள் தொல்லியல் ஆய்விச்சான்றுகள் உறுதி செய்கின்றன.

ஆடிஅமாவாசைத் தினத்தன்று பிதிர்க் கடன் நிறைவேற்றி ஆறுமுகனோடு ஆழ்கடலில் தீர்த்தமாட ஆயிரக்கணக்கான அடியவர்கள் ஒன்றுகூடுவதால் அரசாங்க வாத்தமானியில் யாத்திரைத் திருத்தலமாக இது பிரகடனப்படுத்தப்படுகின்றது.

வடக்கு- மகாவித்தியாலய வீதி, தம்பிலுவில்.
கிழக்கு- கடற்றொழில் வீதி, திருக்கோவில்.
தெற்கு- கடற்கரை வீதி, திருக்கோவில்.
மேற்கு- பிரதான வீதி, திருக்கோவில்.

உற்சவ காலத்தில் மேற்கூறிய எல்லைகளுக்குட்பட்ட பகுதி புனித முகாமாகும்.பண்டு பரவணியான மரபு, சம்பிரதாயங்களுக்கு அமைவாக கோவிலின் தொண்டுகளைச் செய்வதற்கு உள் ஊழியர்கள், வெளி ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.நிருவாகக் கட்டமைப்பில் பொதுச்சபை, வட்டாரப் பிரதிநிதிகள் சபை, பஞ்சாயத்துச் சபை என்பன முதன்மை பெறுகின்றன.மரபுகளுக்கும் யாப்பு விதிகளுக்கும் அமைவாக மகாசபைப் பொதுக் கூட்டத்தில் பஞ்சாயத்துச் சபையினரும் வட்டாரப் பிரதிநிதிகளும் தெரிவு செய்யப்படுகின்றனர்.தலைவர் கரைவாகுப்பற்று வன்னிமைகளின் வம்ச வரன்முறை உரித்துப்படி, நற்பிட்டிமுனை ஊரவர் தெரிவு செய்யப்படுகின்றனர்.செயலாளராக திருக்கோவிலைச் சேர்ந்தவரும் பொருளாளர், வண்ணக்கராக தம்பிலுவில்லைச் சேர்ந்தோரும் கணக்குப்பிள்ளை, உபதலைவராக அக்கரைப்பற்றைச் சேர்ந்தோரும் வருடாந்த மகாசபைப் பொதுக் கூட்டத்தில் தெரிவு செய்யப்படுவர். தலைவர், வண்ணக்கர், கணக்குப்பிள்ளை ஆகிய மூவரின் தெரிவு வம்ச வரன்முறை தழுவியதாக இருத்தல் வேண்டும். இதன்படி சுந்தரலிங்கம்-சுரேஸ் தலைவராகவும், அ.செல்வராஜா செயலாளராகவும், வ.ஜயந்தன் வண்ணக்கராகவும் கோ.கிருஸ்ணமூர்த்தி பொருளாளராகவும்,;, இ.லோகிதராஜா கணக்குப்பிள்ளையாகவும், க.சபாரெட்ணம் உபதலைவராகவும் தற்பொழுது பதவி வகிக்கின்றனர். இப்பொழுது 18பேர் வட்டாரப் பிரதிநிதிகளாக உள்ளனர். திருவிழா, தீர்த்தோற்சவம் என்பன சிறப்பாக நடைபெறுவதற்கு திருவிழா உபயகாரர்கள் ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளனர்.பொது மக்களுக்கான ஏனைய வசதிகளை பிரதேச செயலாளர் ஊடாக ஆலய நிருவாகம் செய்துள்ளது. திருவிழாக் காலங்களின் போது மன்றங்கள், சங்கங்கள், கழகங்கள், வர்த்தகர்கள், உத்தியோகத்தர்கள், பொது மக்கள் ஆகிய அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான முன்னாயத்தங்களை ஆலய நிருவாகம் ஒழுங்கு செய்துள்ளது.அனைவரும் வருக! ஆடிஅமாவாசைத் தீர்த்தமாடி ஆண்டவன் அருள் பெற வருக! என்று ஆலய நிருவாகத்தினர் அன்புடன் அழைக்கின்றனர்.

 

அதிகம் வாசித்தவை