சோழ இளவரசி சீர்பாததேவி அமைத்த ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தின் தேர்த்திருவிழா

கிழக்கிலங்கை அம்பாறை வீரமுனையில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயம் பண்டைத் தமிழர்களின் வரலாற்றை உலகெங்கும் பறைசாற்றிய பிரசித்திமான விநாயகர் ஆலயங்களில் ஒன்றாகும்.

கண்டியை தலைநகரமாக கொண்டு ஆட்சிசெய்த இராஜசிங்கனின் மகன் வாலசிங்க மன்னன் சோழநாட்டு இளவரசி சீர்பாததேவியை மணமுடித்து திரும்புகையில் திருகோணமலையின் கோனேஸ்வரத்திற்கு முன்பாக கப்பலை நகரவிடாமல் தடுத்து நின்ற விநாயகர் சிலையை கப்பலில் எடுத்து வைத்து இக்கப்பல் எங்கு கரை தட்டுகின்றதோ அங்கு ஆலயம் அமைப்பேன் என சீர்பாததேவி வேண்டியதற்கு அமைய கப்பல் மட்டக்களப்பு வாவியினூடாக ஓடி கரை தட்டியபோது அமைக்கப்பட்ட ஆலயமே அம்பாறை வீரமுனை அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயம் ஆகும். 

கடலில் யாத்திரை மேற்கொண்டதன் காரணமாக கடலுக்கு சிந்து எனும் பெயரும் வழங்கபடுவதானால் சிந்து யாத்திரைப் பிள்ளையார் என்று பெயர் பெற்று காலப்போக்கில் சிந்தாயாத்திரை பிள்ளையார் என பெயர் மருவி வழங்கலாயிற்று. இந்த ஆலயத்தின் தோற்றம் பற்றிய வரலாற்றுக்கதை சோழர் காலத்துடனும் சோழர் இராச்சியத்துடனும் தொடர்புடையது. சோழர் காலத்தில் கண்டிய மன்னன் வாலசிங்கனால் கட்டப்பட்ட இந்த ஆலயம் பதினான்காம் நூற்றாண்டுக்கு முற்பட்ட தொன்மை வாய்ந்ததென்று சான்றுகள் கூறுகின்றன. சீர்பாததேவியின் வழிவந்த சீர்பாத குலத்தினர் இன்றும் தமது பாரம்பரிய பண்பாட்டு முறைகளுடன் நிலைபெற்று வாழ்ந்து வருவதை இன்றைய தேர்த்திருவிழாவில் நடந்த சீர்பாத குலத்தினரின் பவனிக் காட்சியினூடே காணமுடிந்தது. 

மாலை 5.00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பஞ்சமுக விநாயகருக்கு விசேட பூஜைகள் நடைபெற்று பூமழை சொரிய ஊர்வலகமாக கொண்டுவரப்பட்டு தேர் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. இந்த தேர் உற்சவத்தில் இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து ஆயிரக்கணக்கான அடியார்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கதாகும். கிழக்கிலங்கையின் வரலாற்றில் யானைகள் பவனியுடன் தேர்த்திருவிழா நடைபெறும் ஆலயமாக வீரமுனை சிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலயம் திகழ்கின்றது. அத்துடன் கிழக்கிலங்கையின் தேரோடும் ஆலயம் என்ற புகழையும் வீரமுனை சிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலயம் பெற்றுள்ளது. பெரும் துயரங்களையும் நெருக்கடிகளையும் கடந்து தம்மை எல்லா வளங்களுடன் வாழவைக்கும் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் பெருமானை மக்கள் திருத்தேர் பவனியில் சுமந்த காட்சி பக்தியின் உன்னதமாக விளங்கியது.

மேலும் படங்களுக்கு இங்கே அழுத்தவும்

அதிகம் வாசித்தவை