வீரமுனையில் வீடு உடைக்கப்பட்டு கொள்ளை
வீரமுனையில் உள்ள வீடு ஒன்றில் நேற்று வியாழக்கிழமை இரவு கொள்ளைச்சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. வீரமுனை ஊர்வீதியில் உள்ள திருக்கோவில் வலய கல்வி அலுவலகத்தில் பிரதிக்கல்விப் பணிப்பாளராக கடமையாற்றும் பூ.பரமதயாளன் என்பவரின் வீட்டிலேயே இந்த கொள்ளைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீரமுனை சிந்தாயாத்திரை பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவம் நடைபெற்றுவரும் நிலையில் நேற்று இரவு வீடுகளைப்பூட்டிவிட்டு ஆலயத்திற்கு சென்றபோதே இந்த துணிகர கொள்ளைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீட்டின் கதவினை உடைத்து உள்சென்று அலுமாரியில் இருந்த 15ஆயிரம் ரூபா பணம் மற்றும் கையடக்க தொலைபேசி என்பனவற்றினை கொள்ளையிட்டுச்சென்றுள்ளதாக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு வந்த சம்மாந்துறை பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.