மொபைல் போனில் "ட்ரூ காலர்"

நம் ஸ்மார்ட் போனில், அழைப்பு ஒன்று வருகிறது. அழைக்கும் எண் நம் போனில் பெயருடன் பதியப்படாமல் இருந்தால், அழைப்பது யாரென்று தெரியாது. யாரென்று தெரிந்தால், அவர் தவிர்க்கப்பட வேண்டிய நபர் என்றால் தவிர்க்கலாம். ஆனால், எப்படி புதிய, பதியாத எண் யாருடையது என்று தெரிந்து கொள்வது? இவர்களுக்கு உதவும் வகையில், ஸ்மார்ட் போனில் இயங்கும் செயலியாக இருப்பது, “ட்ரூ காலர்” என்னும் புரோகிராம் ஆகும். இது ஆண்ட்ராய்ட், ஐபோன், விண்டோஸ் போன், பிளாக் பெரி 10 ஆகியவற்றிற்கென தனித்தனியே இதன் இணைய தளத்தில் (https://www.truecaller.com/download) தரப்பட்டுள்ளது. 200 கோடிக்கும் மேலாக, இதன் தகவல் தளத்தில் மொபைல் போன்கள் உள்ளதாக, இதன் தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இதனை “உலகின் மிகப் பெரிய டெலிபோன் டைரக்டரி” என்றும் கூறலாம். இதன் இணைய தளத்திலும், நீங்கள் மொபைல் போன் ஒன்றைக் கொடுத்து, போனுக்குரியவர் குறித்து தகவல்களைப் பெறலாம். ஆனால், நீங்கள் யாரென்பதை, கூகுள் ஐ.டி. அல்லது மைக்ரோசாப்ட் ஐ.டி. யைத் தர வேண்டியதிருக்கும்.

ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்தும் பயனாளர்களில், 60% பேர் இந்த 'ட்ரூ காலர்' என்னும் செயலியைப் பதிந்து பயன்படுத்துவார்கள். இதுவரை பயன்படுத்தாத ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் வைத்துள்ளவர்கள், True Caller செயலியை, கூகுள் ப்ளே ஸ்டோர் சென்று, தரவிறக்கம் செய்து, போனில் பதிந்து பயன்படுத்தலாம். ஒருவரின் எண் இன்னாருடையது என்று முதலில் பதியப்படும் பெயரே, ட்ரூ காலரில் காட்டப்படுகிறது. அந்தப் பெயர் இந்த செயலிக்கான சர்வரில் பதியப்பட்டு, நமக்கு அழைப்பு வருகையில் காட்டப்படுகிறது. இந்த செயலியைப் பயன்படுத்தி நாம் என்ன என்ன வசதிகளைப் பெறலாம் என்று இங்கு பார்க்கலாம்.

அழைப்புகளைத் தடுக்க:

குறிப்பிட்ட எண்ணில் தொடங்கும் அழைப்புகளை, உங்கள் போனுக்கு வரவிடாமல் தடுக்கலாம். இதுவரை நீங்கள் அறியாத ஒருவர், புதிய எண்ணிலிருந்து உங்களை அழைத்து, தொல்லை கொடுக்கிறார் என்றால், அந்த எண்ணைக் கவனியுங்கள். அழைப்பினை நீங்கள் நிறுத்தியவுடன், உங்களுக்கு ஒரு சிறிய கட்டத்தில் ஆப்ஷன்ஸ் கிடைக்கும். அதில் இந்த குறிப்பிட்ட எண்ணிலிருந்து வரும் அழைப்புகளைத் தடுக்கும் வகையில், செட்டிங்ஸ் அமைத்துவிடலாம். அல்லது அந்த எண்ணின் முதல் நான்கு இலக்கங்களைக் கொடுத்தும் தடுக்கலாம். எடுத்துக் காட்டாக, அந்த எண் 8054ல் தொடங்குவதாக இருந்தால், இந்த நான்கு இலக்கங்களைக் கொடுத்தும் தடுக்கும் வகையில் அமைப்பினை ஏற்படுத்தலாம்.

இணைய இணைப்பு எப்போதும் தேவையில்லை:

உங்கள் மொபைல் போனில் வரும் அழைப்பு எண் யாருக்குரியது என்று அறிய எப்போதும் இணைய இணைப்பில் உங்கள் போன் இருக்கத் தேவையில்லை. முதல் முறை ஓர் எண்ணிலிருந்து அழைப்பு வரும்போதே, அந்த எண்ணுக்குரியவரின் பெயர் எங்கேனும் பதிவு செய்யப்பட்டிருந்தால், அதனை, ட்ரூ காலர் அறிந்து வைத்துக் கொள்கிறது. அடுத்த முறை அழைப்பு வருகையில், தன் நினைவிலிருந்தே அதனை உங்களுக்குக் காட்டுகிறது.

தொல்லை கொடுப்பவரிடமிருந்து பாதுகாப்பு:


தொடர்ந்து ஓர் எண்ணிலிருந்து அழைப்பு பெறப்பட்டு, அழைப்பவர் எரிச்சல் தரும் பேச்சினைத் தொடர்ந்து அளிப்பவராயின், அந்த எண்ணுக்குரியவரை spammer என அடையாளக் குறியிட்டு வைக்கலாம். இது போல ஓர் எண்ணைப் பலர் ஸ்பேம் என அடையாளம் காட்டி இருந்தால், உங்களுக்கு அழைப்பு வருகையில், இந்த எண்ணை இத்தனை சதவீதம் பேர் ஸ்பேம் என குறித்துள்ளனர் என்று தகவல் காட்டப்படும். எனவே, நீங்களும் இதனை முடக்கி வைக்கலாம்.

ட்ரூ டயலர்:

இதே செயலியைப் போன்று, இதனை வழங்கும் நிறுவனம், 'ட்ரூ டயலர்' என்ற (True Dialer) என்ற செயலியையும் தருகிறது. இதனை, உங்கள் போனின் டயலராக செயல்படுத்தலாம். நீங்கள் ஒருவரை அடையாளம் காட்டி அமைத்தால், நீங்கள் குறிப்பிட்ட அடையாளத்துடன், அந்த எண்ணிலிருந்து அழைப்பு வருகையில் தகவல் கிடைக்கும். வழக்கமாக, நீங்கள் டயல் செய்திடுவதனை, இந்த செயலியின் மூலமும் செயல்படுத்தலாம்.

எண் குறித்த தகவல்:

ஓர் எண்ணிலிருந்து அழைப்பு வந்தால் தான், அந்த எண்ணுக்குரியவரை அடையாளம் காட்டும் என்ற வரையறை, இந்த செயலிக்கு இல்லை. எந்த எண்ணையும் ட்ரூ காலரில் கொடுத்து, அந்த எண் யாருக்குரியது என்று நீங்கள் ட்ரூ காலர் மூலம் அறிந்து கொள்ளலாம். ஆனால், அந்த எண்ணுக்குரியவருக்கு, இந்த எண்ணிலிருந்து, உங்கள் எண் குறித்த தகவல் அறியப்பட்டது என்ற தகவல் அந்த எண் கொண்ட போனுக்குச் செல்லும்.

உங்களைப் பற்றிய தகவல் தொகுப்பு:

ட்ரூ காலர் செயலியைப் பயன்படுத்தி, உங்களைப் பற்றிய தகவல் தொகுப்பினை உருவாக்கலாம். இதன் மூலம், நீங்கள் அழைக்கும் நபர்கள், உங்களைப் பற்றிய கூடுதல் தகவல்களை அறிந்து கொள்ள இயலும். எடுத்துக் காட்டாக, உங்கள் முழுப் பெயர் மற்றும் படத்தினை இத்தொகுப்பில் இட்டு வைக்கலாம். அதே போல, Privacy என்ற வகையில், உங்களைப் பற்றிய தகவல்களைக் காட்டாமல் இருக்கவும் அமைக்கலாம்.

உங்கள் எண்ணை நீக்க:


ட்ரூ காலர் உங்கள் எண் குறித்த தகவல்களை யாருக்கும் காட்டக் கூடாது என்று நீங்கள் விரும்பினால், அதனுடைய தகவல் தொகுப்பிலிருந்து, உங்கள் எண்ணை முழுமையாக நீக்கலாம். http://www.truecaller.com/unlist என்ற முகவரியில் உள்ள இணைய தளம் சென்று, உங்கள் மொபைல் எண்ணை, இந்தியாவிற்குரிய குறியீட்டு எண்ணுடன் இணைத்து தர வேண்டும். ஏன் எண்ணை பதிவிலிருந்து நீக்க விரும்புகிறீர்கள் என்பதற்கான காரணத்தை, அதில் தரப்படும் ஆப்ஷன்களிலிருந்து தேர்ந்தெடுத்து அமைக்க வேண்டும். பின்னர், அதில் காட்டப்படும் 'கேப்சா (Captcha)' சோதனையை மேற்கொண்ட பின்னர், 'Unlist' என்பதில் கிளிக் செய்தால், உங்கள் எண் நீக்கப்படும். நீங்கள் அழைப்புகளை மேற்கொள்கையில், உங்கள் எண் குறித்த தகவல் ட்ரூ காலர் வழியாகத் தரப்பட மாட்டாது