இலவசம், தள்ளுபடி அறிவிப்புகளை நம்பி ஏமாறாதீர்!

'ஆன்லைன்' வர்த்தகத்தில், பல்வேறு சலுகைகள் வழங்குவதாக கூறி வாடிக்கையாளர்களை ஏமாற்ற, மோசடி வலை தளங்கள் முயற்சிப்பதாக புகார் வந்துள்ளது. இதனால், பொதுமக்கள், விழிப்புடன் இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர். ஆன்லைன் மூலமாக பொருட்கள் வாங்குபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புத்தகங்களில் ஆரம்பித்த ஆன்லைன் வியாபாரம், இப்போது கார், இருசக்கர வாகனம், வீடு வாங்குவது வரை வளர்ந்திருக்கிறது.


நேரம் மிச்சம்


ஆன்லைன் மூலம், பொருட்கள் வாங்குவதால், நாம் அலைய வேண்டிய நேரம் மிச்சமாகிறது. அத்துடன், நம் வீட்டுக்கே, பொருள் வந்து சேர்கிறது.நாட்டில் பண்டிகை காலம் துவங்க உள்ளது. இம்மாததுவக்கத்தில், துர்கா பூஜையும், இறுதியில், தீபாவளி பண்டிகையும் கொண்டாடப்பட உள்ளன. இதையொட்டி, மக்கள், பல புதுப் பொருட்களை வாங்குவர்.

இவர்களை கவர, ஆன்லைனில் வர்த்தகம் செய்யும் பிரபல நிறுவனங்கள், இப்போதே விளம்பரம் செய்ய துவுங்கியுள்ளன. பண்டிகை காலத்தை முன்னிட்டு, பெங்களூரை தலைமையாக கொண்ட, பல ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் சிறப்பு விற்பனைகளை அறிவித்துள்ளன.இந்த வாய்ப்பை பயன்படுத்தி, சில மோசடி வலைதளங்களும், களம் இறங்கியுள்ளன.

வழங்கவே முடியாத சலுகைகளை அறிவித்து,மக்களை ஏமாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்த மோசடி வலைதளங்கள், தங்களின் சலுகை, தள்ளுபடி அறிவிப்புகள் குறித்து, இ - மெயில், எஸ்.எம்.எஸ்., வாட்ஸ் ஆப் ஆகியவற்றில், தகவல் அனுப்புகின்றன.

சமீபத்தில், ஒரு வலைதளம், மொபைல் போன் மற்றும் பல்வேறு மின்னணு சாதனங்களுக்கு, 98 சதவீதம் வரை தள்ளுபடி வழங்குவதாக அறிவித் திருந்தது. இது பலரது புருவத்தை உயர்த்த வைத்துள்ளது. இது, ஆன்லைன் வர்த்தகத்தில் பிரபலமாக உள்ள நிறுவனங்களுக்கு, பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது.

இது பற்றி, ஆன்லைன் வர்த்தகத்தில் மிகவும் பிரபலமாக உள்ள, ஒரு நிறுவனத்தின் அதிகாரி கூறியதாவது:வழங்கவே முடியாத சலுகைகளை அறிவிக்கும் வலைதளங்களை நம்பி மக்கள் ஏமாறக் கூடாது. இந்த வலைதளத்திடம், தன், கிரெடிட், டெபிட் கார்டு விபரங்களை, தெரிவிக்க வேண்டாம் என, கேட்டு கொள்கிறோம்.



அபாயம்


இந்த வலைதளங்களை, 'கிளிக்' செய்வதால், அவர்களின் நிதி தொடர்பான விபரங்கள், முறை கேடாக பயன்படுத்தப்படும், அபாயம் உள்ளது. மேலும், சில மோசடி வலைதளங்கள், பிரபல நிறுவனங்களின் பெயர்களை, முறைகேடாக பயன்படுத்துகின்றன. அதனால், ஆன்லைனின் பொருட்களை வாங்குவோர், மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தவிர்ப்பது எப்படி?


மோசடி வலைதளங்களை நம்பி ஏமாறாமல் இருப்பது பற்றி, மற்றொரு பிரபல வலைதள நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது: பொது இடங்களில் அல்லது இலவசமாககிடைக்கும், 'வை- பை'யை பயன்படுத்தி பொருட்கள் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். இவை மூலமும் தகவல்கள் திருடு போகலாம்.

அனைத்து விதமான ஆன்லைன் வர்த்தகத்துக்கும், ஒரே கிரெடிட் கார்டை பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் என்ன பொருட்கள் வாங்கி இருக்கிறோம், எவ்வளவு வாங்கி இருக்கிறோம், என்பதை மதிப்பிட முடியும். தள்ளுபடியோ, சலுகையோ நம்ப முடியாதபடி இருந்தால், விற்பனையாளரைப் பற்றி நன்கு விசாரிக்க வேண்டும். அவர்கள் சட்டப்பூர்வமாக இயங்குகின்றனரா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். அந்த விற்பனையாளரிடம் பொருட்கள் வாங்கிய, வாடிக்கையாளர்களின் மதிப்புரைகளை இணையத்தில் தேடி, படித்து, உறுதி செய்து கொள்ள வேண்டும்.


ஆன்லைன் நிறுவனங்கள்

'பிளிப்கார்ட், ஸ்னாப்டீல், அமேசான் உட்பட பல நிறுவனங்கள், ஆன்லைன் வர்த்தகத்தில் பிரபல மாக உள்ளன. ஆனால், இந்த நிறுவனங்களின் பெயரை பயன்படுத்தி, மோசடி வலைதளங்கள், போலி பொருட்களை விற்பனை செய்து மக்களை ஏமாற்றுகின்றன.


பல்வேறு மோசடிகள்


ஆன்லைனில், பொருட்கள் விற்பனை என்றில்லாமல், சீட்டு விளையாட்டு மோசடி, கிரிக்கெட் சூதாட்டம், தீபாவளி சீட்டு மோடி, ஏல மோசடி என, பல மோசடிகள் அரங்கேறுகின்றன. அதனால், கவர்ச்சியான விளம்பரங்களை பார்த்து ஆசைப்படாமல், எச்சரிக்கையுடன் இருந்தால்தான், இந்த மோசடிகளில் இருந்து தப்ப முடியும்.இந்த மோசடிகளில், படிக்காத வர்களை விட படித்தவர்கள்தான் அதிகளவில் ஏமாறுகின்றனர் என, ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.