விண்டோஸ் 7க்குப் பின், ஆப்பிள் வாங்கலாமா?

விண்டோஸ் 10 சிஸ்டம் வெளியான பின்னர், மைக்ரோசாப்ட் நிறுவனம், அதனை ஏற்றுக் கொள்ளுமாறு தன் வாடிக்கையாளர்களின் கழுத்தில் அமர்ந்து நெருக்கிக் கொண்டுள்ளது.இந்த நெருக்கடி நிலை இன்று பலராலும் விவாதிக்கப்படும் ஒரு பொருளாக அமைந்துவிட்டது. இந்தச் சூழ்நிலையில், புதிய கம்ப்யூட்டர்களை வாங்குவோர், புதிய கம்ப்யூட்டர் மட்டுமின்றி, புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டமான விண்டோஸ் 10 ஐ ஏற்றுக் கொள்ளும்படியான சூழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். ஏற்கனவே, விண்டோஸ் 7 அல்லது 8க்கான உரிமங்களை வாங்கி வைத்துள்ள ஒரு சில நிறுவனங்களே, பழைய ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுடன் புதிய கம்ப்யூட்டர்களை விற்பனை செய்து வருகின்றனர். 


இந்நிலையில், ஒரு சிலர், விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை விட்டுவிட்டு, ஆப்பிள் நிறுவனத்தின் மேக் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்குச் சென்றுவிடலாமா என்று எண்ணத் தொடங்கி உள்ளனர். அல்லது, விண்டோஸ் 7 சிஸ்டத்திலேயே இருந்து விடலாமா என்றும் சிந்திக்கத் தொடங்கி உள்ளனர். இதற்கான காரணங்களை இங்கு பார்க்கலாம். விலையின் அடிப்படையில் பார்க்கையில், விண்டோஸ் சிஸ்டம் கொண்ட கம்ப்யூட்டர்களுக்கும், ஆப்பிள் மேக்புக் மற்றும் மேக் புரோ கம்ப்யூட்டர்களுக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை. சில ப்ராசசர் மற்றும் ராம் மெமரி அடிப்படையில் பார்க்கையில், விண்டோஸ் சிஸ்டம் கொண்ட கம்ப்யூட்டர்களின் விலை சற்று அதிகமாகவே உள்ளது. குறிப்பிட்ட திறன் கொண்ட கம்ப்யூட்டர் தான் வாங்க வேண்டும் எனத் திட்டமிடுபவர்களுக்கு, விலை வேறுபாடு பெரியதாகத் தெரியாது. எனவே, மற்ற வேறுபாடுகளை இங்கு காணலாம்.

பயனர் இடைமுகம்:
யூசர் இண்டர்பேஸ் என அழைக்கப்படும், கம்ப்யூட்டர் பயன் படுத்துபவர்களை வழி நடத்தும் பயனர் இடைமுகம், இதில் முக்கிய காரணமாகிறது. விண்டோஸ் 7 பயன்படுத்திப் பின்னர், விண்டோஸ் 8 க்குச் செல்பவருக்கும், ஆப்பிள் மேக் கம்ப்யூட்டருக்குச் செல்பவருக்கும், ஒரே மாதிரியான அனுபவ வேறுபாடு கிடைக்கிறது. சொல்லப் போனால், விண்டோஸ் 8 முற்றிலும் புதிய, குழப்பத்தை ஏற்படுத்தும் சிஸ்டமாகப் பலரால் கருதப்படுகிறது. குறிப்பாக, ஸ்டார்ட் மெனு இல்லாதது, பயன்பாட்டில் சிக்கலைத் தருகிறது. ஆப்பிள் மேக் கம்ப்யூட்டரில், ஸ்டார்ட் மெனு திரையின் இடது புறம் இல்லை என்றாலு, அதன் மெனு நன்றாகத் தெரியும் வகையில் உள்ளது. எனவே, விண் 7 பயன்படுத்தியவர்கள், விண் 8க்குச் செல்வதைக் காட்டிலும், பயனர் இடைமுகம் அடிப்படையில், மேக் கம்ப்யூட்டரையே நாடலாம். ஆனால், தற்போது வந்துள்ள விண்டோஸ் 10ல், மைக்ரோசாப்ட், இந்த வேறுபாடுகளைக் களைந்து, ஸ்டார்ட் மெனுவினை அமைத்து, பயனாளர்களிடம் “இது உங்கள் பழைய வீடுதான்; புதிய பொலிவுடன்” என்று அறிவித்துள்ளது. எனவே, விண்டோஸ் இயக்கத்தில் பழக்கப்பட்டவர்களுக்கு, இது சற்று நிம்மதியையும், பயன்படுத்துவதில் ஒரு எளிமையையும் அளிக்கிறது. எனவே, விண்டோஸ் 10 இந்த வகையில் தனி இடம் பெறுகிறது.

செயலிகள் தேர்வு:

ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான புரோகிராம்கள் என்று பார்க்கையில், விண்டோஸ் சிஸ்டத்தில் இயங்கும் புரோகிராம்களின் எண்ணிக்கையே அதிகம். மேலும், ஒரு மேக் கம்ப்யூட்டரின் விர்ச்சுவல் சூழ்நிலயில், விண்டோஸ் சிஸ்டத்தை இயக்கலாம். ஆனால், மேக் கம்ப்யூட்டரில், விண்டோஸ் இயக்கத்தினை மேற்கொள்ள இயலாது. இருப்பினும், மேக் கம்ப்யூட்டரில் பல்வேறு வகையான செயல்பாடுகளுக்கான செயலிகளை இயக்கலாம். சில வேளைகளில், ஒரே பயன் தரும் இரு வேறு அப்ளிகேஷன்களை, விண்டோஸ் விர்ச்சுவல் சூழ்நிலையில் இயக்கலாம். எனவே, இரண்டு வகை செயலிகளை ஒரே கம்ப்யூட்டரில் பயன்படுத்த விரும்பினால், மேக் கம்ப்யூட்டர் செல்லலாம். அல்லது, நீங்கள் விரும்பும் செயலிகளின் திறனுக்கேற்ப, இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம். அவற்றின் நிலைத்த இயக்க தன்மையும், இந்த தேர்வில் உங்களுக்கு உதவலாம். மைக்ரோசாப்ட் தன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் தந்த சில குறைபாடுகள் நீக்கப்பட்டுவிட்டன. இருப்பினும், மாற்றம் விரும்புவோர் இரண்டையும் ஆய்வு செய்து விருப்பத்திற்கேற்ப தேர்ந்தெடுக்கலாம்.