காட்டு யானை இனம் 15 ஆண்டுகளில் அழிந்து போகும்: வனவாழ் உயிரின பாதுகாப்பு இயக்கங்கள் கவலை

ஒவ்வொரு பதினைந்து நிமிடத்துக்கு ஒருமுறை நிச்சயமாக உலகின் ஏதோ ஒருமூலையில் உள்ள காடுகளில் ஒரு காட்டு யானையேனும் அதன் தந்தத்துக்காக கொல்லப்படுகின்றது. தந்தங்களின் விற்பனைக்கு பல நாட்டு அரசுகள் தடை விதித்திருந்தாலும், கள்ளச் சந்தைகளில் அவற்றின் விற்பனை அமோகமாகவே உள்ளது. நமக்கு தெரிந்தோ, தெரியாமலோ பல்வேறு உயிரினங்களும், இயற்கை வளங்களும் அழிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே, ஆப்பிரிக்க நாடுகளில் வேட்டைக்காரர்களுக்கு பயந்து அரிய காண்டாமிருகத்துக்கு பாதுகாப்பாக துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

எனவே, இதுபோன்ற வேட்டைகளை தடுக்க நம்மால் ஆனதை செய்ய முயற்சிப்போம். தற்போதைய நிலவரப்படி ஆண்டுதோறும் முப்பத்து ஆறாயிரம் காட்டு யானைகள் தந்தங்களுக்காக கொல்லப்படுகின்றன. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் இன்னும் 15 ஆண்டுகளுக்குள் அரியவகையைச் சேர்ந்த காட்டு யானைகள் இனம் முற்றிலுமாகவே அழிந்துவிடும் என வனவாழ் உயிரினங்களின் பாதுகாப்பை வலியுறுத்தும் இயக்கங்கள் கவலை தெரிவித்துள்ளன. யானைகளின் பாதுகாப்பை வலியுறுத்தும் விதமாக நேற்றைய தினம் சர்வதேச யானைகள் தினம் அனுசரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.